லக்னோ: இந்திய அளவில் புகையிலை பிடிக்கும் சிறுவர்கள் குறித்து (GYTS) Global Youth Tobacco Survey அதாவது 'உலகளாவிய இளைஞர் புகையிலை கணக்கெடுப்பு' ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில், சுமார் 13 வயது முதல் 15 வயது வயதிலான குழந்தைகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு புகையிலை பொருட்களைப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
இதில், 38 சதவீதம் பேர் சிகரெட், 47 சதவீதம் பீடி மற்றும் 52 சதவீதம் பேர் புகையிலை உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள் எனவும் இவர்கள் 10 வயதை கடப்பதற்கு முன்பே இந்த புகையிலை பழக்கத்திற்கு அடிமையாவதும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அளித்துள்ள இந்திய தன்னார்வ சுகாதார அமைப்பின் தலைமை நிர்வாகி பாவ்னா பி.முகோபாத்யாய், "இந்தியாவில் கடந்த 2016 முதல் 2017 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி சுமார் 27 கோடி பேர் புகையிலை உட்கொள்வதாகவும் இதனால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட நோய்களால் ஆண்டுக்கு சுமார் 12 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய அளவில் உள்ள இளைஞர்கள் புகையிலை பயன்பாட்டை தொடங்க ஆரம்பிக்கும் வயது 18ஆக உள்ளது எனவும் பெண்களை விட ஆண்கள் தான் அதிக அளவு புகையிலை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
மேலும், "புகையிலை பயன்பாட்டால் சுமார் 25க்கும் மேற்பட்ட நோய்களும், 40க்கும் மேற்பட்ட புற்று நோய்களும் ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உள்ளது எனவும், அதிலும் குறிப்பாக, வாய் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், வயிற்றுப் புற்றுநோய் மற்றும் மூளைக் கட்டி ஆகியவை ஏற்படும்" எனத் தெரிவித்தார்.