ஒடிசா:மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா அதிவிரைவு ரயில் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில் இதுவரை 238 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 900க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடர்பாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் உள்பட இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமின்றி படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு வெளியிட்டுள்ளனர்.
அந்த வகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் ஒடிசாவின் பாலசோர் ரயில் விபத்து துரதிஷ்டவசமானது எனவும், அந்த செய்தியை அறிந்து மிகவும் துயருற்றேன் எனவும் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள திரௌபதி முர்மு, மீட்புப் பணிகள் வெற்றியடையவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் இறைவனை வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாகவும் இந்த துக்ககரமான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நினைத்து வருந்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்து நடந்த இடத்தில் நடைபெற்று வரும் மீட்புப்பணிகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் கேட்டறிந்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், பாலசோர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான செய்தி அறிந்து வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவிப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் அளிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களையும், தலைவர்களையும் கேட்டுக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேபாள பிரதமர் பிரச்சண்டா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளார். மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுசபை தலைவர் சிசாபா கொரோசி, ஒடிசா ரயில் விபத்து குறித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், விபத்து குறித்தும் பயணிகள் இறப்பு குறித்தும் அறிந்து மிகுந்த வேதனையுற்றதாக கூறியுள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் தனது இரங்கலை தெரிவிப்பதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.