ஐதராபாத்: உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளின் முக்கிய நோக்கம், முதியோர்கள் படும் துன்பங்கள் மற்றும் அவர்களுக்கு ஏற்படும் கொடுமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஆகும்.
நமது நாட்டில் தற்போது இதுபோன்ற சம்பவங்கள் தினந்தோறும் நடந்தேறி கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் தங்கள் வயதான பெற்றோரை சரியாக நடத்தாமல், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி அவர்களது கடைசி காலங்களிலும் அவர்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் நிகழ்வு எண்ணில் அடங்காதவை.
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தின் வரலாறு: 2011 ஜூன் 11ஆம் தேதி தான், உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2011 டிசம்பரில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
இதை ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 'முதியோர் வன்கொடுமை தடுப்புக்கான சர்வதேச நெட்வொர்க்' மற்றும் 'உலக சுகாதார அமைப்பு' இணைந்து, முதியோர்கள் அதிக அளவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் நோக்கிலும், அதை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கிலும் இந்த நாளை உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
முதியோர் வன்கொடுமை வழக்குகள் அதிகரிப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலகில் 6 முதியவர்களில் ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாகிறார். இது சோகத்தை தாண்டி அனைவரும் வெட்கப்படவேண்டிய ஒன்று. தற்போதைய சூழலை பார்க்கும்போது, இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் குறைவதற்கு பதிலாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில் தற்போதைய காலகட்டங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் யாருடைய தலையீடுகளையும் விரும்பாதவர்களாகவும், எதிர்காலம் குறித்து சுயநலமாக சிந்திக்க ஆரம்பித்துள்ளதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன.
ஹெல்பேஜ் இந்திய ஆய்வின் தகவல்:முதியோருக்கு எதிரான வன்கொடுமைகள் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இதில் முதுமைக்காலத்தில் ஆண்களை விட பெண்களே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்களிடம் கல்வி அறிவு மற்றும் சேமிப்பு இல்லாத காரணத்தால் இவர்கள் இன்றளவும் பொருளாதார ரீதியாக பிறரை சார்ந்து இருக்கும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். மேலும் இத்தகைய வன்கொடுமைகளை தடுக்க தங்களுக்கான சட்டங்கள் மற்றும் குறைதீர் மையங்கள் குறித்த விழிப்புணர்வு இன்றியும் இவர்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.
உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினத்தின் நோக்கம்: முதியோர்களுக்கான நல்ல சிகிச்சை, அவர்களின் சிறந்த உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார பிரச்சனைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து உலகம் முழுவது உள்ள மக்களிடையே விழிப்புணர்வை பரப்புவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க:ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி என்றால் என்ன? பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!