ஐதராபாத் : இன்று சர்வதேசம் உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலக மக்கள் அனைவருக்கும் சுகாதாரமான மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு கடந்த 1979ஆம் ஆண்டு முதல் உலக உணவு தினம் நடைமுறைப்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் சராசரியாக 82 கோடி பேர் போதிய உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருபுறம் அளவுக்கு மீறி தயார்படுத்தப்பட்ட உணவுகள் குப்பை கூழங்களில் வீசப்படுகின்றன. மறுபுறம் ஒரு ரொட்டி துண்டுக்காக பச்சிளம் குழந்தை கண்ணீர் மல்க கை நீட்டி ஏங்கி நிற்கும் அவலங்களும் இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்தியாவில் மட்டும் போதிய உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் கிடைக்காமல் 21 சதவீதம் குழந்தைகள் தங்களது சராசரி எடையை காட்டிலும் எடை குறைந்து காணப்படுவதாக ஆய்வு அறிக்கை கூறுகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான்.
நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாக தான் நமக்கு கிடைக்கிறது. உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அவதிப்படும் மக்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கருப் பொருளாக கொண்டு சர்வதேச உணவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உணவின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பசி, பட்டினியை எதிர்த்துப் போரிடவும் கடந்த 1945 ஆம் அண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization) தொடங்கப்பட்டது. அதை தொடர்ந்து 1979ஆம் ஆண்டு அந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளை, சர்வதேச உணவு தினமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 1981ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச உணவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நாளில் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் முதல் உணவினை ஏற்றுமதி , இறக்குமதி செய்யும் தொழிலாளர்கள் என அத்தனை பேரையும் நினைவு கூற கடமைப்பட்டு உள்ளோம்.உலகம் பல்வேறு காலங்களில் உணவுப் பஞ்சங்களை கண்டு உள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட முற்றிலும் செயற்கையான பஞ்சம் முதல் பேரிடர்களால் ஏற்பட்ட பஞ்சம் வரை பட்டினியால் பலாயிரக்கணக்கான மக்கள் மரித்து உள்ளனர்.
ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட வங்காள பஞ்சம் என சொல்லிக் கொண்டே போகலாம். வங்காள பஞ்சத்தில் ஒருவேளை உணவு கூட கிடைக்காமல் பசியால் மக்கள் துடிதுடித்து செத்து மடிந்தனர். இப்படி பலமுறை பஞ்சம் உலக மக்களை அச்சுறுத்தி உள்ளது. இயற்கை பேரிடர், போர் உள்ளிட்ட காரணங்களால் இடம் பெயர்வுகளை சந்திக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இஸ்ரேல் - பாலஸ்தீன போரால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். சொந்த நாட்டை விட்டு வெளியேறி உணவுக்காகவும், சுகாதாரமான சூழலுக்காகவும் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். முன்னதாக பாலஸ்தீன மக்கள் பட்ட அதே துயரை உக்ரைனிய மக்களும் எதிர்கொண்டனர்.
நடப்பு 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச உணவு தினத்தின் கருப்பொருள், தண்ணீர் தான் வாழ்க்கை, "தண்ணீர் தான் உணவு, யாரையும் கை விட்டுவிடாதீர்கள்" என்பதாகும். உலகில் வாழ தண்ணீர் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. மனிதனின் உடல் 50 சதவீதம் தண்ணீரால் நிறைந்தது. தண்ணீரை கொண்டே உணவு உயிர் வாழ தேவையான அனைத்து பொருட்களும் உருவாக்கப்படுகின்றன.
ஆனால் இந்த விலைமதிப்பற்ற வளமானது எல்லையற்றது அல்ல, அதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும் என்றும் நாம் என்ன உண்கிறோம், அந்த உணவு எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது அது எப்படி தண்ணீரை பாதிக்கிறது என்பதை அறிந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றும் ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்து உள்ளது.
இதையும் படிங்க :நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் வாங்கினாரா மஹுவா மொய்த்ரா? பாஜக எம்.பி. மக்களவை சபாநாயகருக்கு கடிதம்!