டெல்லி :நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று (செப். 19) மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்த நிலையில் இன்று அந்த மசோதா மீதான விவாதம் நடைபெறுகிறது. மூன்றில் ஒரு பங்கு மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பெரும்பாலான கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெறும் என எதிர்பர்க்கப்படுகிறது.
5 நாள் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டம் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி, தமிழக எம்.பி. டி. ஆர். பாலு உள்ளிட்டோர் உரையாற்றினர். தொடர்ந்து இரண்டாவது நாள் கூட்டம் நேற்று (செப். 19) புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் முன் அனைத்து கட்சி எம்.பிக்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி 75 ஆண்டுகால இந்திய வரலாற்றின் சாதனைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
தொடர்ந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். இன்று (செப். 20) இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற உள்ளது. இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக இயற்ற வழிவகை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம், மசோதாவில் ஏதேனும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மீண்டும் மாநிலங்களவை விவாதத்திற்கு செல்லும். தொடர்ந்து மாநிலங்களவையிலும் வாக்கெடுப்பு நடத்தி இந்த மசோதா வெற்றி பெற்றால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு கட்சிகளின் உடன்பாடு இல்லாத காரணத்தினால் மக்களவையில் நிறைவேற்ற முடியாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், தற்போது பாஜக ஆட்சியில் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. முன்னதாக இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :எரிபொருள் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணம்.. 3 மாதத்தில் விலை மாற்றம் - தமிழக அரசின் நடவடிக்கை என்ன?