பாட்னா : பீகாரில் சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்கச் சென்ற பெண் சுரங்கத் துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் 44 பேரை போலீசார் கைது செய்தனர். பாட்னா மாவட்டத்தில் உள்ள பிடா டவுனில் சட்ட விரோத மணல் கடத்தல் நடப்பதாக மாவட்ட சுரங்கத் துறை பெண் அதிகாரிக்கு தகவல் கிடைத்து உள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பெண் அதிகாரி, சோதனையில் ஈடுபட்டார். அப்போது பெண் அதிகாரியிடம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து பெண் அதிகாரி மீது தொழிலாளர்கள் கொடூர தாக்குதலில் ஈடுபடத் தொடங்கினர்.
கற்கள் உள்ளிட்ட கீழே கிடந்த பொருட்களை எடுத்து பெண் அதிகாரி மீது தூக்கி வீசி கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டியும், அடித்தும் துன்புறுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியான நிலையில் வேகமாக பரவியது.
இதையும் படிங்க :வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் அபாயம்.. பீர் வேண்டாம் மோர் குடிங்க.. மருத்துவர்கள் கூறும் சம்மர் டிப்ஸ்!
சம்பவம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், 44 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருவதாக பீகார் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதற்கு முன் சித்தமர்கி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் இளைஞர் சந்தேகத்திற்கிடமாக இறந்த விவகாரத்தில் போலீசார் மீது அப்பகுதி இளைஞர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் போலீசாரை குற்றவாளியாக கருதிய உள்ளூர் இளைஞர்கள் அவர் மீது கற்களை வீசியும் அவரது வாகனத்தை அடித்து நொறுக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
கோபம் குறையாத இளைஞர்கள் உள்ளூர் காவல் நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வேகமாக பரவியது. இந்த தாக்குதல் விவகாரத்தில் ஏறத்தாழ 25 பேரை போலீசார் கைது செயது சிறையில் அடைத்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க :Karnataka Election: ஹிமாச்சல் பாணியில் ஆட்சியை இழக்கும் அபாயம்.. கர்நாடாக பாஜகவில் நடப்பது என்ன?