டெல்லி: மேற்கு வங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் 1993ஆம் ஆண்டு மாந்திரீகம் செய்ததாகக் கூறி கேசரி மஹதோ என்ற பெண் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து பேரில் இருவர் மட்டும் ஆயுள் தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். ஆகையால், தங்களது ஆயுள் தண்டனைக்கு எதிராக இருவரும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில், தங்களிடம் கொலை செய்வதற்கான எண்ணம் இல்லை. எதிர்காலத்தில் அந்தப் பெண்ணின் மாந்திரீகப் பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க, அந்தப் பெண்ணுக்கு ஒரு பாடம் கற்பிக்க நினைத்தபோது எதிர்பாராத விதமாக கொலை நடத்தது என கூறப்பட்டது. ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
மேலும், அப்பெண்ணின் தலையில் ஏற்பட்ட காயங்களின் தன்மையைக் காணும்போது, இந்த கொலை எதார்த்தமாகவோ அல்ல அச்சுறுத்தல் செய்வதற்காகவோ நடந்ததுபோல தெரியவில்லை. இதன் மூலம், கொடிய ஆயுதங்களால் அப்பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கொலை செய்திருப்பது தெரியவருகிறது என நீதிபதிகள் கூறினர்.