புனே: மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச்சேர்ந்த பெண்மணி ஒருவர், கணவர், மாமனார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசில் புகார் அளித்தார்.
அதில், "எனக்கு கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் ஆனது. திருமணம் ஆனது முதலே தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் வரதட்சணைக்கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வந்தனர். கணவர் தனது கையெழுத்தை போலியாகப் போட்டு, தனது சொத்துகளை அடமானம் வைத்து 75 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
அதேபோல் ஆண் குழந்தை பெறவில்லை எனக்கூறி கணவரின் பெற்றோர் கொடுமைப்படுத்தி வந்தனர். ஆண் குழந்தைப் பெற வேண்டும் என்பதற்காக பில்லி சூனியம் போன்ற பல்வேறு மாந்திரீக சடங்குகளை செய்ய வற்புறுத்தினர். அண்மையில், அருவியில் நிர்வாணமாக குளித்தால் ஆண் குழந்தைப்பிறக்கும் என உள்ளூர் மாந்திரீகர் கூறியதைக் கேட்டு, என்னை பொதுவெளியில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தினர். என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்திய இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியாரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மாந்திரீகரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:வரதட்சணையாக புல்லட் தராததால் மனைவிக்கு முத்தலாக் கொடுத்த கணவர்