மும்பை:டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த ஷ்ரத்தா வாக்கர் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காதலன் அப்தாப் தனது காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசினார்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவம் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதே பாணியில் பல கொலைகள் நடந்தன. குற்றவாளிகள் கொலை செய்வதோடு நிறுத்தாமல் உடல்களை கூறுபோட்டு அப்புறப்படுத்தும் சம்பவங்கள் பல மாநிலங்களில் அடுத்தடுத்து நடந்தன.
இந்த நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மகாராஷ்ட்ராவில் நடந்துள்ளது. மகாராஷ்ட்ராவில் மும்பை அருகே மீரா பந்தர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், 56 வயதான மனோஜ் சானே என்ற நபரும், 32 வயதான சரஸ்வதி வைத்யா என்ற பெண்மணியும் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் அந்த குடியிருப்பில் சுமார் மூன்று ஆண்டுகளாக வசித்து வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில் நேற்று (ஜூன் 7) காலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் வசித்தவர்கள் மனோஜிடம் கேட்டுள்ளனர். அதற்கு மாலைக்குள் சரிசெய்துவிடுவதாகக் கூறிவிட்டு வீட்டில் ரூம் பிரஷனரை அடித்துவிட்டு வெளியே சென்றுள்ளார். இரவு நேரமாகியும் துர்நாற்றம் போகவில்லை, இதனால் அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தனர். போலீசார் வீட்டில் சோதனை செய்து கொண்டிருந்தபோது மனோஜ் அங்கு வந்தார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகின. தனது லிவ் இன் பாட்னரான சரஸ்வதியை, மனோஜ் சில நாட்களுக்கு முன்பு கொலை செய்து துண்டு துண்டாக வெட்டியது தெரியவந்தது.