டெல்லி:இதுகுறித்து DCP இஷா பாண்டே கூறுகையில், கடந்த வியாழன்கிழமை மாலை 4 மணி அளவில், கர்ஹி பகுதியிலிருந்து சுமார் இரண்டு மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக அமர் காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, அமர் காவல் நிலையத்தில் ஐபிசி 328/363 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதனையடுத்து குழந்தையைத் தேடும் பணியில் ஒரு குழு களமிறங்கினர். குழந்தையை கடத்திய அந்தப் பெண் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் குழந்தையின் தாயை சந்தித்து, தாய் மற்றும் குழந்தைப் பராமரிப்புக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் தான் ஒரு உறுப்பினராக உள்ளதாக தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
பின்னர் சில நாட்களுக்குப் பிறகு, அக்குழந்தையின் வீட்டிற்கு சென்று குழந்தையின் தாயிடம் நல்ல முறையில் பேசி குழந்தையை தன்னுடன் அழைத்துச்சென்று வருவதாக கேட்டுள்ளார். அப்பெண்ணை நம்பிய தாய், குழந்தையைக் கொடுத்து, உறவினர் ஒருவரையும் உடன் அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் குழந்தையை கடத்திய பெண் உடன் வந்த உறவினருக்கு மயக்கமருந்து கலந்த குளிர்பானம் கொடுக்க, அதைக் குடித்த உறவினர் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். இந்த சமயத்திற்காக காத்திருந்த அந்த பெண் மயங்கி விழுந்த உறவினரை அங்கேயே விட்டுவிட்டு குழந்தையை கடத்திச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு சுயநினைவிற்கு திரும்பிய உறவினர் குழந்தை கடத்தப்பட்டதை அறிந்து, முழு விவரத்தையும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குடும்பத்தினர் இச்சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராயத் தொடங்கினர். அதில் கடத்தப்பட்ட பெண்ணின் வாகனத்தை அடிப்படையாக கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றதில் அங்கு யாரும் இல்லை.