மும்பை: ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோவான வில் ஸ்மித், கிங் ரிச்சர்ட்டின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார். ஆஸ்கர் விருது வாங்குவதற்கு முன்பு, மேடையில் தனது மனைவியை கிண்டல் செய்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையிலேயே ஓங்கி அறைந்தார்.
அப்போது அவர் கூறிய வசனம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கானது. ஆஸ்கர் விருது பெற்றதை விட, கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவம் உலகளவில் பிரபலமானது. இதன் காரணமாக ஆஸ்கர் குழுவிலிருந்து வில் ஸ்மித்துக்கு ஆஸ்கர் 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே வில் ஸ்மித்தே விலகிவிட்டார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிகர் வில் ஸ்மித் பொதுவெளியில் தென்படவில்லை. இந்த நிலையில், மும்பையில் உள்ள தனியார் விமான நிலையத்திற்கு வில் ஸ்மித் வந்தார். வெள்ளை உடை, கழுத்தில் மாலை என பார்க்க ஒரு துறவி போல காட்சியளித்தார்.
அங்கிருந்த தனது ரசிகர்களை நோக்கி கையசைத்தார் ஸ்மித். வெள்ளை உடையில் அருகில் உள்ள நபருடன் அவர் பேசும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #WillSmith என்ற ஹாஷ்டேக்கை ஸ்மித்தின் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். ஆஸ்கர் சர்ச்சைக்கு பிறகு முதல் முதலாக வில் ஸ்மித், இந்தியாவில் தென்பட்டதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். ஸ்மித்தின் இந்திய வருகைக்கான காரணம் தெரியவில்லை.
இதையும் படிங்க: நல்ல படங்கள் எந்த மொழியில் வந்தாலும் தமிழ் ரசிகர்கள் ஓட வைப்பார்கள் - உதயநிதி ஸ்டாலின்!