பெங்களூரு:நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், 135 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே 4 நாட்களாக நீடித்த இழுபறியின் முடிவில், கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சரும், மூத்த தலைவருமான சித்தராமையா இன்று (மே 20) பதவி ஏற்க உள்ளார்.
அதேபோல், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் துணை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற உள்ள பதவி ஏற்பு நிகழ்வில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்றைய தினமே (மே 19) பெங்களூரு சென்றுள்ளார். இதனிடையே, இன்று நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில், சித்தராமையாவின் அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, நேற்றைய தினம் சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகிய இருவரும், அமைச்சரவையில் இடம் பெற உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரை பட்டியலோடு சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றனர். அங்கு இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதன் பிறகு சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் ஆகிய இருவரும், இன்று காலை பெங்களூரு வந்தடைந்தனர். இதனிடையே, மூத்த அரசியல் பிரமுகர் ஜெகதீஷ் ஷெட்டர் அமைச்சரவையில் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனை ஒட்டி, நேற்று முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள சித்தராமையாவை ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார்.