மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலம், கோஜல்சா கிராமத்தைச் சேர்ந்த ரேணு காதுன் என்ற பெண்மணி, துர்காபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தார். இவர் அண்மையில் அரசுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால், அரசு மருத்துவமனையில் பணியில் சேர இருந்தார்.
ஆனால், ரேணுவின் கணவர் ஷீர் முகமதுவால் தனது மனைவி அரசுப்பணியில் சேர்வதை ஏற்க முடியவில்லை. காரணம் ஷீர் முகமதுவுக்கு வேலை ஏதும் இல்லை. மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிட்டால், தன்னைவிட்டுப்பிரிந்து சென்றுவிடுவார் என்று ஷீர் முகமது அஞ்சியதாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதேபோல் சம்பவத்தன்று இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஷீர் முகமது மனைவி ரேணுவின் மணிக்கட்டில் வெட்டியதாகத் தெரிகிறது. ரத்த வெள்ளத்தில் ரேணு துடிதுடித்த நிலையில், ஷீர் முகமது மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரேணுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் வெட்டப்பட்ட கையை மருத்துவர்கள் அகற்றிவிட்டனர்.
திருமணம் ஆனதிலிருந்தே, ரேணு வேலைக்குச் செல்வதை கணவர் ஷீர் முகமது எதிர்த்து வந்ததாகவும், அதன் காரணமாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் ரேணுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத்தில் காரில் சிறுமி பாலியல் வன்கொடுமை!