டெல்லி:இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள போதிலும், மருத்துவர்கள் உள்பட நாட்டின் சுகாதாரப் பணியாளர்களில் 66 விழுக்காட்டினருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்த சந்தேகம் இத்தகைய மோசமான விழுக்காட்டிற்கு காரணமாக இருக்கலாம் என இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஆர்.வி.அசோகன், நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசும்போது தெரிவித்தார்.
”கரோனா நோயாளிகள் மத்தியிலே இயங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக உதவியாளர்கள், ஆஷா ஊழியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவே மத்திய அரசு முன்னுரிமை தந்தது.
அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 1.64 கோடி சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மட்டுமே தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 0.67 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியையும், 0.97 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.
மேலும், 2.29 கோடி முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், 0.83 கோடி பேர் இரண்டாம் தவணை, 1.46 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியையும் எடுத்துள்ளனர்.