பெங்களூரு:கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சராக சித்தராமையா பதவி ஏற்க உள்ளார் என்றும், இதற்கான நிகழ்வுகள் நாளை (மே 18) பெங்களூருவில் நடைபெற உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகத் தகவல் அளித்துள்ளார்.
கடந்த 10ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் 13ஆம் தேதி பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டது. இந்த தேர்தலின் முடிவில் 135 இடங்களைக் கைப்பற்றிய காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க உள்ளது.
இதனையடுத்து பாஜக 66, மதச்சார்பற்ற ஜனதா தளம் 19, கல்யாண ராஜ்ய பிரகதி பாக்ஷா மற்றும் சர்வோதயா கர்நாடகா பாக்ஷா ஆகிய கட்சிகள் தலா 1 மற்றும் சுயேச்சைகள் 2 இடங்களிலும் வென்றனர். காங்கிரஸ் அடைந்த வெற்றி, கர்நாடக காங்கிரஸ் தலைமை அலுவலகம் மட்டுமின்றி, டெல்லி காங்கிரஸ் தலைமையகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் உள்ள காங்கிரஸ் தலைமை இடங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் கர்நாடக காங்கிரஸில் பெரும் அலை அடிக்கத் தொடங்கியது. அதுதான், கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது.
அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் ஆகிய இருவரும் முதலமைச்சர் போட்டியில் இருந்தனர். இதன் தொடக்கப் புள்ளியாக தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள் (மே 14) வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், யார் முதலமைச்சர் என்ற முடிவை கட்சித் தலைமையே இறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டது.
இதனால் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் மீது அனைவரது கவனமும் திரும்பியது. இதற்கு முன்னதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார்கள் என இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மல்லிகார்ஜூன கார்கேவிடம் அக்கட்சி முதலமைச்சர் தேர்வு குறித்த பொறுப்பினை கொடுத்தது. இதனையடுத்து, நேற்றைய முன்தினம் (மே 15) முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மட்டும் டெல்லி சென்றார். இதனால் கர்நாடக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது.