சிம்லா: இமாச்சல் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 75.6 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவும் என கணிக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஏற்றார் போலவே இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இரு கட்சி வேட்பாளர்களும் மாறி மாறி முன்னிலை வகித்தனர். இதனால், எந்தக் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பிற்பகலில் காங்கிரஸின் ’கை’ ஓங்கியது. மாலை நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 39 தொகுதிகளில் வென்றுள்ளது. பாஜக 24 தொகுதிகளில் வென்றுள்ளதோடு, இரு தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. சுயேட்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
பெரும்பான்மைக்கு தேவையான 35 இடங்களை கடந்து காங்கிரஸ் வென்றுள்ளதால், பாஜக முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற வேட்பாளர்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக சத்தீஸ்கரில் தங்க வைக்க திட்டமிடப்படப்பட்டுள்ளது.