புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சுப்பிரமணியம் மற்றும் புதுச்சேரி மக்களவை உறுப்பினர் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து விட்டு பின்னர் ஆலோசனை நடத்தினர்.
இதனையடுத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, "எங்கள் அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என மோடி அரசும், துணை நிலை ஆளுநரும் இணைந்து செயல்பட்டனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நியமன எம்எல்ஏ-க்களை வைத்து கவிழ்த்துள்ளனர். தொடர்ந்து மக்கள் பணி செய்துவருகிறோம். மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்ததைப் போல புதுவையில் ஆட்சியைக் கவிழ்க்க பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டுள்ளது.
'பொய்யாக மொழிபெயர்க்கவில்லை'
புதுவையில் ராகுல் காந்தி வந்தபோது, நான் பொய்யாக மொழிபெயர்க்கவில்லை, அந்த அம்மையார், தானே புயலை பற்றி சொல்கிறார் என நினைத்து நான் வந்தேன் என்று கூறினேன். ராகுல் காந்தியிடம் தவறாக மொழிபெயர்க்கவில்லை. நான் உண்மையை சொன்னேன் என்பதை நிரூபிக்கத் தயார்.
மத்திய அரசு அனுப்பிய 15 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை நான் எடுத்துக்கொண்டதாக பொய்யான புகார் கூறி வருகின்றனர். பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொய் கூறி வருகின்றனர். நான் இந்த பணத்தை காந்தி குடும்பத்துக்கு கொடுத்ததாவும் கூறிவருகின்றனர். இது உண்மை என்றால் விசாரணை ஆணையம் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக நான் உள்துறை அமைச்சர் மீது மான நஷ்ட வழக்கு பதிய உள்ளேன்" என்றார்.
முதலமைச்சர் வேட்பாளர் யார்?
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் தேர்வு செய்யப்படுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நாராயணசாமி, "திமுக-காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்" என பதிலளித்து விட்டு செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார்.