ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளில் கரன்பூர் தவிர்த்து மீதமுள்ள 199 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்த நிலையில் அங்கு தேர்தல் தள்ளிவைக்கபப்ட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், பெரும்பான்மைக்கு 101 தொகுதிகள் தேவைப்பட்டதில், பாஜக 115 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவாரம் தாண்டிய நிலையில் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதில் தொடர் இழுபறி நீடித்தது.
முன்னாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே, மகந்த பாலக்நாத் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரேசில் முன்னணியில் இருந்தனர். இந்நிலையில், இன்று (டிச. 12) ஜெய்ப்பூரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பிரகலாத் ஜோஷி, பாஜக பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீவிர ஆலோசனைக்கு பின்னர் ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார். 56 வயதான பஜன்லால் சர்மா, சங்கனர் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கனர் தொகுதியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 162 வாக்குகள் பெற்ற பஜன்லால் சர்மா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புஷ்பேந்திர பரத்வாஜ் என்பவரை விட 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.