பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி சார்பாக முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் சிங் மாண் அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். நகைச்சுவை நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பகவந்த் சிங் மாண், அரவிந்த் கெஜ்ரிவாலுக்குப் பிறகு அக்கட்சியின் இரண்டாவது முக்கிய நபராக மாறவுள்ளார்.
பகவந்த் சிங் மாணின் அரசியல் தொடக்கம்
பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் சிங் மாண் அறிவிக்கப்பட்டபோதே ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதாகப் பார்க்கப்பட்டது. அது எப்படி என்று நீங்கள் கேட்டால், தன்னுடைய நடிப்பினால் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர், பகவந்த் சிங், 2014 மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாபில் 4 இடங்களை வென்றதற்கு முக்கியக் காரணம், இவர் தான். பஞ்சாபில் ஜாட் சிங் குடும்பத்தில் வசதியான பின்னணியோடு பிறந்த பகவந்த் சிங் மாணுக்கு லட்சக்கணக்கில் சொத்துக்கள் இருக்கின்றன.
தென்னிந்திய அரசியலை கரைத்துக் குடித்தவர்
இவர் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாமல், பல மேடைகளில் ஸ்டாண்ட்அப் காமெடிகளை செய்து அசத்துவார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இவருக்கு அரசியல் ஆர்வம் எங்கிருந்து தோன்றியது என்று பார்த்தால், அதற்கு மூலகாரணமாக இருந்தவர், அவரது தந்தையார். இதனால் பகவந்த் சிங் சிறு வயதிலிருந்தே அரசியலை ஆராயத் தொடங்கினார். வட இந்திய அரசியலை மட்டும் பார்க்காமல் தென்னிந்திய அரசியலையும் கரைத்து குடித்தவர் பகவந்த் சிங். இவருக்கு 12 வயது இருக்கும்போதே திமுகவைப் பற்றி படித்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார், பகவந்த் சிங்.
குடிபோதைக்கு அடிமை
என்னதான் நகைச்சுவை நடிகராகவும், அரசியலைப் பற்றி கரைத்து குடித்துவிட்டார் என்று சொன்னாலும், அதைவிட அதிகமாக அவர் குடித்தது மதுபானத்தைத் தான்.