ஜெனீவா(சுவிட்சர்லாந்து):கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு மட்டும் அதிக கவனம் செலுத்தியதால் கடந்த இரு ஆண்டுகளில் மலேரியா உள்ளிட்ட நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு அதிகளவில் கவனம் செலவிடப்பட்டன. இதனால் மலேரியா தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டு பரவல் அதிகரித்துள்ளன.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் பேர் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு ஆளானதாகவும், கூடுதலாக 63 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பதிவான மலேரியா வழக்குகளில் 95 சதவீதம் ஆப்பிரிக்க நாடுகளில் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கடந்த ஆண்டையும் சேர்த்து ஆப்பிரிக்காவில் இதுவரை 6 லட்சத்து 19 ஆயிரம் பேர் மலேரியா நோய்த் தாக்குதலுக்கு உயிரிழந்து இருப்பதாக உலக சுகாதார் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.