கடந்த மே 21ஆம் தேதி தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுடன் காணொலிக் காட்சி வழியாகப் பேசிய, அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சன், கரோனாவுக்கு எதிரான போரில் தமிழ்நாட்டுக்கு உதவ உறுதியளித்தார்.
எட்டு கோடி தடுப்பூசிகள்
வெளிநாடுகளுக்கு எட்டு கோடி தடுப்பூசிகளை வழங்கி உதவ அமெரிக்கா முன்வந்துள்ள நிலையில், இந்தியாவுக்கு ஆஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதை உறுதி செய்ய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் கோரிக்கை விடுக்குமாறு, பழனிவேல் தியாகராஜன் முன்னதாக ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சனிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அமெரிக்க அதிபருக்கு கடிதம்
இதனை ஏற்றுக்கொண்ட ரெவ்.ஜெஸ்ஸி ஜேக்ஸன், உடனடியாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், " உலக நாடுகளுக்கு நன்கொடையாக வழங்கவுள்ள 8 கோடி தடுப்பூசிகளில், குறைந்தபட்சம் 6 கோடி தடுப்பூசிகளையாவது இந்தியாவுக்கு வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ரெவ் ஜெஸ்ஸி ஜாக்சனுடன் காணொலி சந்திப்பு வெள்ளை மாளிகை சந்திப்பு
இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 1 ஆம் தேதி, ரெவ். ஜெஸ்ஸி ஜேக்ஸன், ரெயின்போ புஷ் கூட்டணியின் அகில உலக தூதுவருமான டாக்டர் விஜய் பிரபாகரும் டுல்சா ஆகியோர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்தனர். அப்போது, தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்குவதற்கான அவசியத்தை எடுத்துரைத்தனர். இதற்கு ஜோ பைடன் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
தமிழரின் குரலுக்கு செவிசாய்த்த வெள்ளை மாளிகை தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி
தடுப்பூசிகளை இந்தியாவிற்கு அனுப்புவதில் ஜெஸ்ஸி ஜேக்ஸனுடன், வெள்ளை மாளிகை அலுவலர்களும் இணைந்து பணியாற்றுவார்கள் என உறுதியளித்தது மட்டுமின்றி, தமிழ்நாடு அரசு நேரடியாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும், தனியார் அமைப்புகள் தடுப்பூசிகளையும் மருத்துவக் கருவிகளையும் வாங்கி விநியோகம் செய்வது குறித்த வாய்ப்புக்களை பரிசீலனை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.
பிரதமர் மோடியிடம் பேசிய கமலா ஹாரிஸ்
இந்தியாவுக்கு தடுப்பூசி அனுப்புவது குறித்து பிரதமர் மோடியுடன், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரில் நேற்று, தொலைப்பேசி வாயிலாக கலந்துரையாடினார். இதனால் விரைவில் இந்தியாவுக்கு தடுப்பூசி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தனியாக தடுப்பூசிகளை வழங்க அமெரிக்க வெள்ளை மாளிகை முடிவு எடுத்துள்ளதாக் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். மிக விரைவில் அமெரிக்காவின் தடுப்பூசிகள் தமிழகத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.