மங்களூர்: கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி திரிகோடினத்தைச் சேர்ந்தவர், மேகராஜ் (வயது 27). இவர் கடந்த நவம்பர் 2022-ல் கேரளாவில் உள்ள தனது வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அதனைத்தொடர்ந்து, மேகராஜை தேடிய அவரது குடும்பத்தினர், எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் கோட்டயத்தில் உள்ள திரிகோடினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மேகராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். வீட்டிலிருந்து காணாமல் போன மேகராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவராக மங்களூருவில் சுற்றித் திரிந்துள்ளார். மங்களூரு பாடில் காட்டுப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சுற்றித் திரிந்த அவரை, 'ஒயிட் டவ்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கொரினா ரஸ்கினா என்பவரின் தலைமையிலான குழு, அழைத்து வந்துள்ளனர். அப்போது மன நலம் பாதிக்கப்பட்ட அவர் சரியாகப் பதிலளிக்கவில்லை.
மேலும், அழைத்து வரும் வழியிலேயே வாகனத்தின் கண்ணாடி வழியாக குதித்து தப்பிக்கவும் முயன்றுள்ளார். அவரைத் தடுத்து ஒயிட் டவ்ஸ் அமைப்பின் கட்டடத்திற்கு அழைத்து வந்த பின், கட்டடத்தின் மேலிருந்து குழாய் வழியாக கீழே இறங்கி தப்பித்துள்ளார். அதன்பிறகு, அவர் குந்திகானாவில் உள்ள ஏ.ஜே.மருத்துவமனை அருகே கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பலமுறை தப்பிக்க முயன்ற அவரை தேடிக்கண்டு பிடித்த ஒயிட் டவ்ஸ் அமைப்பு, அவருக்கு முறையான சிகிச்சை வழங்கியது. அமைப்பு வழங்கிய சிகிச்சையால் பூரண குணமடைந்த மேகராஜ் தனது ஊரின் பெயரைக் கூறியுள்ளார். அதன் பின், ஒயிட் டவ்ஸ் ஊழியர்கள் திருக்கோடினம் காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டபோது, அவர் காணாமல் போனது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.