கொச்சி:இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளா செல்கிறார். பாஜகவின் தேசிய மாநாடு மற்றும் பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தொடர்ந்து நாட்டின் முதல் வாட்டர் மெட்ரோ திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.
போக்குவரத்து துறையின் அடுத்த அத்தியாயம் எனக் கூறப்படும் இந்த திட்டம் ஆயிரத்து 137 கோடி ரூபாய் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கேரள மாநில அரசு மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த KfW என்ற நிறுவனத்தின் கூட்டு நிதியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
கேரளாவின் கனவுத் திட்டம் என இந்த வாட்டர் மெட்ரோ திட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. கொச்சி மாவட்டத்தில் இருந்து செயல்படுத்தப்படும் இந்த வாட்டர் மெட்ரோ 10 தீவுகளை ஒன்றிணைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாட்டர் மெட்ரோ திட்டத்திற்கு முதற்கட்டமாக கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் இருந்து மின் மற்றும் எரிபொருளில் இயங்கக் கூடிய 8 கலப்பின கப்பல்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
ஒட்டுமொத்தமாக கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டம் மூலம் 38 முனையங்களில் 78 கப்பல்களை இயக்க திட்டமிட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். முற்றிலும் குளிர்சாதன வசதியுடன் உருவாக்கப்பட்டு உள்ள இந்த வாட்டர் மெட்ரோ மாநிலத்தின் சுற்றுலாத்துறையும், பொது போக்குவரத்தையும் ஊக்குவிக்கும் என கூறப்பட்டு உள்ளது.
மேலும் கொச்சி துறைமுக பகுதியில் உள்ள மக்கள் வாழ்வாதாரம் பெருக இந்த திட்டம் வழிவகை செய்யும் என கூறப்பட்டு உள்ளது. திட்டத்தின் முதல் கட்டமாக, உயர் நீதிமன்றம் - வைபின் டெர்மினல் மற்றும் வைட்டிலா- காக்கநாடு டெர்மினல் வரையில் கப்பல் போக்குவரத்து சேவைகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.