பெங்களூரு:கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது.மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
கர்நாடகாவை பொறுத்தவரையில் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என பாஜகவும், பாஜகவின் வாக்கு வங்கியை சரிக்கும் நோக்கத்தில் காங்கிரஸ் கட்சியும் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று (மே.2) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: The Kerala Story: தேசிய கவனத்தை ஈர்த்த 'தி கேரளா ஸ்டோரி' - உண்மையை நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு என அறிவிப்பு!
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேபோல், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாஜக அரசு கொண்டு வந்த அநீதியான, மக்கள் விரோத சட்டங்கள் அனைத்தும் ஓராண்டுக்குள் ரத்து செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "காங்கிரஸ் அளித்துள்ள இந்த வாக்குறுதிகள் அனைத்தும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் உத்தரவாதம் அளித்தார்.
முன்னதாக நேற்று பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், ஏழைகளுக்கு நாள்தோறும் அரை லிட்டர் பால் இலவசமாக வழங்கப்படும், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3 சிலிண்டர், ரேஷன் கார்டுக்கு தினமும் அரை லிட்டர் பால்.. கர்நாடக பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!