ஹைதராபாத்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவால் நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தை இன்று உலகமே உன்னிப்பாக கவனித்து வருகிறது. ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவில் மோதி நொறுங்கியது. இந்தியாவிற்கு முன்னதாக நிலவில் விண்கலத்தை தரையில் இறக்கும் இலக்கை ரஷ்யா இழந்து உள்ளதால், இந்தியாவை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்றும் கூறலாம்.
அதேநேரம், இந்தியாவின் நிலவாராய்ச்சி தொடர்பான முந்தைய 2 திட்டங்கள் தோல்வியில் முடிவடைந்ததால், இந்த திட்டத்தின் வெற்றியை உலகம் உற்று நோக்குவதாகவும் எடுத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும், இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்க உள்ளது உறுதி என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதனை நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
விக்ரம் - பிரக்யான்:விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவை சிறப்பாக செயல்படும் என இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொண்டு உள்ளனர். விக்ரம் லேண்டர் நிலவைத் தொடுவதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்டு உள்ளது. அதேநேரம், சந்திரனின் தரைப்பரப்பில் இருக்கும் ரசாயனங்களை பகுப்பாய்வு செய்வதில் ரோவர் பிரக்யான் முக்கியப் பங்கு வகிக்கும்.
பூமியின் 14 நாட்களுக்கு சமமான ஒரு நாள் நிலவு நாளை விக்ரம் லேண்டர் கொண்டிருக்கும். இதன் எடை ரோவர் உடன் ஆயிரத்து 749.86 கிலோ ஆகும். இதில் நான்கு அறிவியல் பூர்வமான பேலோட்ஸ்கள் உள்ளன. நிலவினுடைய மேற்பரப்பில் இருக்கும் எலக்ட்ரான்ஸ் மற்றும் அயனிகளின் அடர்த்தியை அளவிடுவதிலும், அவற்றின் தேவைக்கேற்ப அதனை மாற்றுவதிலும் ரேடியோ அனாடமி ஆஃப் மூன் பவுண்ட் ஹைபர் சென்சிட்டிவ் அயனோஸ்பியர் அண்ட் அட்மாஸ்பியர் (Radio Anatomy of Moon Bound Hypersensitive ionosphere and Atmosphere) முக்கிய பங்கு வகிக்கும்.
சந்திரயானின் தெர்மோ பிஸிக்கல் மேற்பரப்பு பரிசோதனை (Surface Thermo physical Experiment) மூலம், நிலவின் துருவங்களுக்கு அருகில் அதன் மேற்பரப்பில் இருக்கும் தெர்மல் கூறுகளை அளவிடுவதில் முக்கிய பங்கு வகிக்கும். அதேபோல், நிலவில் தரையிரங்கும் இடத்தைச் சுற்றி உள்ள நில அதிர்வு மற்றும் நிலவின் மேல்கட்டமைப்பு ஆகியவற்றை துருவ நில அதிர்வை அளவிடும் செயல்பாடு (Instrument for Lunar Seismic Activity) அளவீடு செய்யும்.