கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் உள்ள பமாங்கோலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாகுவா ஹாட் பகுதியில் இரண்டு பழங்குடியினப் பெண்களை நிர்வாணப்படுத்தி, குழுவாக சில பெண்கள் சேர்ந்து தாக்கிய வீடியோ கடந்த ஜூலை 19ஆம் தேதி வைரலானது. அந்த வீடியோ தொடர்பாக மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், அந்த வீடியோவில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரையும், அதே காவல் நிலையத்தின் கீழ் உள்ள உள்ளூர் போலீஸ் அவுட் போஸ்ட்டை கொள்ளையடித்ததாக பமாங்கோலா காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் அளித்த தகவலின் பேரில் நேற்று (ஜூலை 22) போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மால்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் குமார் யாதவ் கூறுகையில், ''இரண்டு பழங்குடியினரை துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் தவிர, இந்த விவகாரத்தில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களையும் போலீஸார் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர். அதே நேரத்தில், உள்ளூர் காவல் நிலையத்தை கொள்ளையடித்ததில் இரண்டு பழங்குடியினப் பெண்களுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.
இரண்டு பழங்குடியினப் பெண்களைத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் மினாட்டி டுடு, பசந்தி மார்டி, ரேவதி பர்மன் என்ற மூன்று பெண்களும், மனோரஞ்சன் மொண்டல் மற்றும் பெஜாய் மொண்டல் ஆகிய இரு ஆண்களும் அடங்குவர்.