சிம்லா:ஹிமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி, இன்று(நவ.6) பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 11 அம்ச தேர்தல் வாக்குறுதிகளை கொண்ட அறிக்கையை, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இதில், 6 முதல் 12ஆம் வகுப்பு வரையில் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் உள்ளிட்ட முக்கிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் நேரங்களில் அளிக்கப்படும் இலவசங்களால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாக்குரிமை அனைத்தும் பாதிக்கப்படுவதாக பாஜக கடுமையாக விமர்சித்து வந்தது.
தற்போது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் பிரத்யேகமாக தெரிவித்த பாஜக தேசியத் தலைவர் நட்டா, "மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும், மக்களை கவர்வதற்காக திட்டங்கள் அறிவிப்பதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. மக்களுக்கு தேவையில்லாத ஒன்றை கொடுப்பது கவர்ச்சி. ஆனால் ஒரு முறை முதலீட்டில் ஒருவருக்கு அதிகாரம் வழங்கி, அதன் மூலம் அவர்களின் தலைவிதியை மாற்றுவது அதிகாரமளித்தல் என்று அழைக்கப்படுகிறது. அதைத்தான் நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம்.
பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம், ஏனெனில் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டால், அவர்களின் குடும்பங்களும் தானாகவே மேம்படும். மாநிலத்தில் விவசாயிகளுக்கும் அதிகாரம் அளிக்க விரும்பினோம்" என்று கூறினார். குஜராத்தில் காங்கிரசைவிட ஆம் ஆத்மி முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேட்டபோது, "எங்களது போட்டி காங்கிரஸுடன்தான் இருக்கும், அதை நீங்கள் தேர்தல் முடிவுகளில் பார்க்கலாம். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா என பல இடங்களிலும் ஆம்ஆத்மி சலசலப்பை உருவாக்குகிறது, ஆனால் எல்லா இடங்களிலும் வெற்றப்பெறவில்லை. டெபாசிட் இழந்தார்கள்.
ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற காங்கிரசின் கூற்று குறித்து கேட்டபோது, "ஐந்தாண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் என்ற வழக்கத்தை நாங்கள் ஏற்கனவே மாற்றிவிட்டோம். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் என்று பல மாநிலங்களில் அதை மாற்றினோம்" என்று கூறினார். அதேபோல் தேர்தலை எதிர்கொள்ள அப்போதும் தயாராக இருப்பதாகவும் நட்டா தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்' - பிரதமர் மோடி!