கொல்கத்தா:மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் கைது செய்யப்பட்டார். என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று (ஜனவரி 5) மேற்கு வங்காள மாநிலம், வடக்கு 24 பர்கானா மாவட்டத்திலுள்ள, சந்தேஷ்காலி என்ற இடத்தில் திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக் மற்றும் சங்கர் ஆத்யா ஆகியோரின் இடங்களில் சோதனை செய்வதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவப் படை பாதுகாப்புடன் சென்றுள்ளனர்.
இதனை அறிந்த திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100க்கு மேற்பட்டோர் சோதனை செய்ய வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அமலாக்கத்துறை வாகனத்தைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமலாக்கத்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மேற்கு வங்காள ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இன்று (ஜனவரி 05) கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயகத்தில் சட்ட ஒழுங்கை காப்பது மற்றும் காழ்ப்புணர்ச்சியைத் தடுப்பது மாநில அரசாங்கத்தின் கடமையாகும். மாநில அரசு அடிப்படை செயல்களைச் செய்யத் தவறியுள்ளது. ஆளுநர் என்ற முறையில் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்ந்து இச்சம்பவம் தொடர்பாகக் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தனது X பக்கத்தில், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தேசத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்; 5 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய டெல்லி நீதிமன்றம் ஒப்புதல்!