மாஸ்கோ : ரஷ்யாவுக்கு எதிரான கிளர்ச்சி நடைபெற்ற 5 நாட்களுக்கு பின் அதிபர் புதினை, கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜின் பிரிகோஜின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பின் போது ரஷ்ய அரசுக்கு விஸ்வாசமாக இருப்பதாக பிரிகோஜினின் தளபதிகள் கூறியதாக அரசு மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி நடந்த மூன்று மணி நேர சந்திப்பில் எவ்ஜின் பிரிகோஜின் மட்டுமல்லாமல், அவரது வாக்னர் குழுவின் தளபதிகள், ராணுவ ஒப்பந்ததாரர்கள் என பலர் கலந்து கொண்டதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்து உள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன என்பதை வாக்னர் குழுவின் தளபதிகள் தெரிவித்ததாகவும், போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள், மற்றும் ராணுவ தளபதி உள்ளிட்டோருக்கு ஆதரவாக இருந்ததாக அடிக்கோடிட்டு காட்டியதாகவும் மீண்டும் தாய்நாட்டுக்கு ஆதரவாக போராட தயாராக இருப்பதாக தெரிவித்ததாகவும் அவர் கூறி உள்ளார்.
இந்த கூட்டத்தில் வாக்னர் கூலிப்படை அமைப்பின் தலைவர் எவ்ஜின் பிரிகோஜின் பேசியது தொடர்பாக தெளிவான அறிக்கைகள் ஏதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், மூடிய அறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் சமரசத்திற்கான காரணம் தெரியவரவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அறிவித்தது. சிறிய நாடான உக்ரைனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற ரஷ்யாவின் எண்ணம் விரைவில் பொய்த்துப் போகும் வகையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொடுத்த படை பலத்தின் உதவியுடன் உக்ரைன் ஈடுகொடுத்து போர் செய்தது.
இதனால் ரஷ்ய ராணுவம் பலத்த சேதத்தை காண வேண்டிய நிலை உருவானது. போரில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவியாக அந்நாட்டின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு களமிறங்கியது. வாக்னர் குழு உதவியுடன் உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது.