டெல்லி : ஒடிசா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் பழங்குடியின தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (பிப்.25) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 83.
இவர், ஒடிசாவில் இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். டிசம்பர் 7, 1989 முதல் மார்ச் 5 ,1990 வரையும், டிசம்பர் 6, 1999 முதல் மார்ச் 5, 2000 வரையும் முதலமைச்சர் பதவியில் இருந்துள்ளார்.
இவரின் மறைவிற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் ஹேமானந்தா பிஸ்வாலின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது நீண்ட அரசியல் வாழ்க்கையில், அவர் எப்போதும் மக்களின் நலனுக்காக போராடினார்.
ஒடிசாவின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணியால் எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : தேச பாதுகாப்புக்கு சைபர் பாதுகாப்பு முதன்மையானது - பிரதமர் மோடி பேச்சு