சாம்பல்பூர்:ஒடிசா மாநிலம், சாம்பல்பூரில் ஹமனுன் ஜெயந்தி நாளை (ஏப்ரல் 14) வரை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புதன்கிழமை மாலை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது இருதரப்பினர் இடையே வன்முறை ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், பேரணி சென்று கொண்டிருந்தபோது மற்றொரு தரப்பினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியது தெரியவந்துள்ளது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக வெடித்தது. ஏராளமான இருசக்கர வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. கார்கள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன.
இச்சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் போலீசார் 10 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, ஃபேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சிலர் விஷம கருத்துகளைப் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.