டெல்லி:நீதிமன்றத்தின் உத்தரவை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது குடும்ப வாரிசுகளின் வங்கி கணக்கிற்கு மாற்றியதற்காக, விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்தும் உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 11) தீர்ப்பளித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ரூ 9,000 கோடிக்கு மேல் கடன் பெற்று, கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையா, நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மல்லையா தொடர்ந்த வழக்கை 2020ஆம் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இந்த அவமதிப்பு வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் மல்லையா நேரடியாகவோ, அல்லது வழக்கறிஞர் மூலமாக ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறியிருந்தது. இருப்பினும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இன்று, நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையை மேற்கொண்டது. அப்போது, நீதிமன்ற உத்தரவுகளை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது குடும்ப வாரிசுகளின் வங்கி கணக்கிற்கு மாற்றியதற்காக அவமதிப்பு வழக்கில், விஜய் மல்லையாவுக்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: இந்தியா இலங்கைக்கு எப்போதும் உதவியாகவும் ஆதரவாகவும் உள்ளது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!