ஹைதராபாத்: ரவுடி ஹீரோ என அழைக்கப்படும் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை குவித்த படம் தான் குஷி. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், இன்று (செப்.1) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் 'மகாநதி' படத்திற்கு பின் இந்த இருவரும் இணைந்து நடிக்கும் படமாகும்.
ஷிவ நிர்வாணா இயக்கி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இப்படத்தில் முரளி ஷர்மா, லக்ஷ்மி, ஜெயராம், வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் இந்த படம் இன்று திரைக்கு வந்துள்ளது. எதார்த்த கதைப்போக்கை கொண்டு நகரும் படங்களில் ஒன்றாக இப்படம் பாரக்கப்பட்டாலும், ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இது உள்ளது.
நேற்று இன்ஸ்டாகிராமில் விஜய் தேவரகொண்டாவின் பதிவு: "என்னால் இதை நம்பவே முடியவில்லை. பெரிய திரையில் நீங்கள் என்னைக் கண்டு ஒரு வருடம் ஆகிவிட்டன. இருப்பினும் அனைத்தும் வேகமாக நடப்பதைப் போல் உள்ளது. இந்த படம் உங்களுக்கு நிச்சயம் மனமகிழ்வை அளிக்கும். உங்கள் முகத்தில் எழும் மகிழ்ச்சியை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. இன்னும் சில மணி நேரங்களில் ‘குஷி’ உங்களுக்காக.. அன்புடன் விஜய் தேவரகொண்டா" எனப் பதிவிட்டிருந்தார்.