நியூயார்க்:குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் செய்தித் தொடர்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான அஜய் சிங், பிரதமர் மோடி குறித்து 'தி ஆர்கிடெக்ட் ஆஃப் தி நியூ பிஜேபி' (The Architect of the New BJP) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகம், இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இப்புத்தகம் நேற்று(ஜூலை 23) அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. நியூ ஜெர்சி மாகாணத்தில் இந்தோ-அமெரிக்கன் ஆர்ட்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு இந்த புத்தக வெளியீட்டு விழாவை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய புத்தகத்தின் ஆசிரியர் அஜய் சிங், பிரதமர் மோடி குறித்தும், 'தி ஆர்கிடெக்ட் ஆஃப் தி நியூ பிஜேபி' புத்தகம் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், "பிரதமர் மோடி இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளார். அவருக்கு இந்திய சமூகம் பற்றி ஆழமான புரிதல் உள்ளது. இது பல்வேறு பிரச்சினைகளைக் கையாள அவருக்கு பலத்தை அளித்துள்ளது. நான் புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். எனது ஆய்வின்படி, காந்திக்குப் பிறகு பிரதமர் மோடியைப் போல இந்திய சமூகத்தின் உளவியலைப் பற்றி ஆழமான புரிதல் வேறு யாரும் இல்லை.
பிரதமர் மோடியின் பேச்சுத்திறன், அரசியல் சித்தாந்தம், அவர் செய்த வளர்ச்சிப் பணிகள் போன்றவைதான் அவரது வெற்றிக்கு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த காரணங்களை வைத்து பாஜகவின் வளர்ச்சி குறித்து துல்லியமாக விளக்க முடியாது. உண்மையில் பாஜகவின் வளர்ச்சியை வைத்தே பிரதமர் மோடியின் வெற்றியை விளக்க முடியும்.