கொல்கத்தா: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா (81) ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (நவ.13) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா தொகுதியில் 9 முறை மக்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாசுதேவ் ஆச்சாரியா முதன்முறையாக 1980-இல் பாங்குராவில் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 வரை 9 முறை பாங்குரா தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரும் நடிகையுமான மோனோ மூன் சென் என்பவரால் தோல்வியடைந்தார்.
பாசுதேவ் ஆச்சாரியா மேற்கு வங்கத்திலுள்ள புருலியா மாவட்டத்தில் 1942 ஜூலை 11-ஆம் தேதி பிறந்தார். அதன்பின் தனது மாணவப் பருவத்திலிருந்து இடதுசாரி அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பின் மாணவர் அரசியலிலிருந்து தொழிற்சங்க அரசியலுக்கு ரயில்வே துறையில் தொழிலாளர் இயக்கங்களின் முன்னணியாகத் தன்னை மாற்றிக் கொண்டார்.