தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் நிபா: உறுதி செய்தது கேரள அரசு; தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்! - NCDC

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவன் உயிரிழந்திருந்த நிலையில், அவனுடைய மாதிரியில் நிபா வைரஸ் தொற்று கண்டறிப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் நிபா
மீண்டும் நிபா

By

Published : Sep 5, 2021, 2:48 PM IST

கோழிக்கோடு (கேரளா):கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம், கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று ஏற்பட்டு மாநிலம் முழுவதும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. அப்போது கோழிக்கோட்டில்தான், தென்னிந்தியாவில் முதன்முதலாக நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

தற்போது, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதே மாவட்டத்தில் 12 வயது சிறுவன், நிபா வைரஸ் தொற்றின் அறிகுறிகளுடன் நேற்று (செப். 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இதையடுத்து, அச்சிறுவன் இன்று (செப். 5) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சிறுவனின் மாதிரிகளை பரிசோதித்ததில், நிபா வைரஸ் தொற்று அச்சிறுவனை தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அச்சப்பட தேவையில்லை

இத்தகவலை அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,"நேற்றிரவு அந்த சிறுவனின் உடல் மோசமாக இருந்த வந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்தது மிகவும் கவலைக்குரியது.

நேற்றிரவே, தனித்தனி குழுக்கள் அமைத்து சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் உடனடியாக தொடங்கப்பட்டது. தற்போதைய சூழலில் எதற்கும் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.

தனிவார்ட்டு அமைப்பு

தற்போதுவரை, அச்சிறுவனின் குடும்பத்தினருக்கோ அல்லது அவனுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கோ எவ்வித அறிகுறியும் தென்படவில்லை. இந்நிலையில், இன்று கோழிக்கோடு விரைகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

சிறுவன் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானவுடன், கோழிக்கோட்டில் உள்ளூர் அலுவலர்கள் தொற்று பரவல் நடவடிக்கைகளில் தீவரம் காட்டி வருகின்றனர். மக்கள் நடமாட்டத்தையும், போக்குவரத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும் என காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் யாருக்கும் காய்ச்சல், வாந்தி போன்ற உடல்நல கோளாறு ஏற்பட்டால் உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிபா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக தனி வார்ட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உடனடி நடவடிக்கைகள்

இதையடுத்து, மாநில அரசுக்கு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் உதவி புரிய, நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் (NCDC) குழு ஒன்றை ஒன்றிய அரசு கேரளாவிற்கு அனுப்பியுள்ளது. அக்குழு இன்று கேரளா வந்தடையும்.

மேலும், உடனடி பொது சுகாதார நடவடிக்கையாக, உயிரிழந்த சிறுவன் கடந்த 12 நாள்களில் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், அவர்களை தீவிர தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்துதல், குறிப்பாக மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர்களை கண்டறிந்து அவர்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை கூடத்திற்கு அனுப்புதல் போன்றவற்றில் அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நிபா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால், கடுமையான சுவாச தொற்று மற்றும் அபாயகரமான மூளையழற்சி நோய் பாதிப்பு ஏற்படவும், இறப்பு விகிதம் 40 முதல் 75 சதவீதம் என கூறப்படுகிறது.

அறிகுறிகள் என்னென்ன

இந்த வைரஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு நேரடியாகப் பரவும். எந்த சிகிச்சையும் அல்லது தடுப்பூசியும் இல்லை. நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உருவாகின்றன.

தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் தொண்டை புண் ஆகிய அறிகுறிகள் தென்படுகின்றன. மேலும் கடுமையான சுவாசக் கோளாறு உள்ளிட்ட சுவாசப் பிரச்சினைகள் போன்றவையும் ஏற்படுகிறது என சுகாதரத் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கடந்த 24 மணி நேரத்தில் 42,766 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details