டெல்லி:தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளுடன் (Sleeper Coach) கூடிய வந்தே பாரத் ரயில், அடுத்த ஆண்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வரும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் தற்போது இருக்கை வசதி மட்டும் உள்ள நிலையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு படுக்கை பெட்டிகளை தயாரிக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது X தளத்தில் வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளின் மாதிரிப் படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத்தின் கான்செப்ட் படங்கள். 2024ஆம் ஆண்டு வரவுள்ளது” என தெரிவித்துள்ளார்.
நவீன படுக்கையுடன், மிகப்பெரிய ஜன்னல் மற்றும் ஏசி வசதியுடன் இந்த ரயிலின் உட்புறம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டடுக்கு ஏசி பெட்டிகளில் மேற்கூரையில் சிறந்த அழகிய வேலைப்பாடுகளுடன் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. மேல் படுக்கையில் ஏறுவதற்கு 6 படி ஏணி அமைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.