ருத்ரபிரயாக் (உத்தரகாண்ட்):உத்தரகாண்ட் மாநிலத்தில் 'சார்தாம் யாத்திரை' மிகவும் பிரபலமானது. இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதியுடன் இந்த யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில், உத்தரகாண்டில் உள்ள நான்கு புனிதத் தலங்களான யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்துக்கு யாத்திரை செல்வார்கள்.
இந்த யாத்திரையை இந்துக்கள் மிகவும் முக்கியமாக கருதுகின்றனர். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த யாத்திரையை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை கால்நடையாகவும், குதிரை சவாரி மூலமாகவும் மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டு சார்தாம் யாத்திரைக்காக சுமார் 16 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், உத்தரகாண்டில் நடைபெற்ற ஒரு சம்பவம் வலைதளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில், யாத்திரக்குப் பயன்படுத்தப்படும் குதிரைக்கு இருவர் கஞ்சாவை புகைக்க வைக்க கட்டாயப்படுத்திக் கொண்டிருந்து உள்ளனர். இது தொடர்பாக சுற்றுலாப் பயணி ஒருவர் எடுத்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
குதிரையை கஞ்சா புகைக்க இருவர் கட்டாயப்படுத்தும் அந்த வீடியோ வலைதளங்களில் வைரலானதை அடுத்து, உத்தரகாண்ட் போலீசார் நடவடிக்கையைத் தொடங்கி உள்ளனர். மேலும் இது குறித்து உத்தரகாண்ட் போலீசார் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “குதிரையை கட்டாயப்படுத்தி புகை பிடிக்கச் செய்யும் வீடியோவில் உள்ளவர்கள் குறித்து விசாரித்து வருகிறோம். இது போன்ற சம்பவங்கள் குறித்து தெரிவிக்கவும், உடனடி நடவடிக்கைக்காகவும் 112 என்ற எண்ணை அழைக்கவும்” என பதிவிட்டு உள்ளனர்.
அதிர்ச்சி அளிக்கச் செய்யும் அந்த வீடியோவில், இரண்டு மனிதர்களும் தங்கள் கைகளைக் கொண்டு குதிரையின் வாய் மற்றும் ஒருபுற நாசி துவாரத்தை மூடி, மற்றொரு நாசி துவாரம் வாயிலாக குதிரையை கட்டாயப்படுத்தி கஞ்சாவை புகைக்கச் செய்கின்றனர். போராடிய குதிரை வேறு வழியின்றி புகையை உள்ளே இழுத்து வெளியேற்றுகிறது.
கஞ்சா போதையில் குதிரைகள் களைப்பு தெரியாமல் அதிகம் வேலை செய்வதாலும், காயம் அடைந்தாலும் உணர்வுகளின்றி தொடர்ந்து வேலை செய்வதாலும் இது போன்ற செயல்கள் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்த சுற்றுலாப் பயணி ஏன் குதிரையை இவ்வாறு கஷ்ட்டப்படுத்துகிறீர்கள் என்று கேட்டதற்கு, குதிரைக்கு உடம்பு சரியில்லை என்று உரிமையாளர் கூறியுள்ளார்.
இது குறித்து கேதார்நாத் தலைமை கால்நடை மருத்துவர் அசோக் பன்வார் கூறுகையில், “விலங்குகள் துன்புறுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு பிராந்திய ராக்ஷாக் தள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சோன்பிரயாக், லிஞ்சோலி உள்ளிட்ட 4 இடங்களில் டாக்டர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
கடந்த ஆண்டு குறைந்தது 190 குதிரைகள் இறந்துள்ளன. இந்த ஆண்டு இதுவரையில் 90 குதிரைகள் உயிரிழந்துள்ளன. அனைத்து குதிரைகளும் காயம், நோய் போன்ற காரணங்களாலே உயிரிழந்து உள்ளன. கேதார்நாத் யாத்திரையின்போது, ஒரு நாளைக்கு சுமார் 4000 பயணிகள் குதிரைகள் மற்றும் கழுதைகளில் சவாரி செய்கின்றனர். அதிகரித்து வரும் பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குதிரை மற்றும் கழுதைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: Manipur violence: அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம்