வாஷிங்டன்: அமெரிக்க விமானப் படையின் துணை அமைச்சராக இந்திய வம்சாவெளியான ரவி சவுத்ரி நியமனத்திற்கு செனட் சபை ஒப்புதல் அளித்து உள்ளது. விமானப் படையின் துணை அமைச்சராக அவர் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. துணை அமைச்சராக ரவி சவுத்ரியை நியமனம் செய்வது தொடர்பான மனு செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது நடந்த வாக்கெடுப்பில் ரவி சவுத்ரி துணை அமைச்சராக 65 பேர் ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்து 29 பேரும் வாக்களித்தனர். இதில் ரவி சவுத்ரி நியமனத்திற்கு 12க்கும் மேற்பட்ட குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு வாக்குகள் அளித்தது குறிப்பிடத்தக்கது.
பெடரல் எக்சிகியூட்டிவ் இன்ஸ்டிடியூட்டின் முன்னாள் மாணவரான ரவி சவுத்ரி, பாதுகாப்பு துறை சார்ந்த திட்ட மேலாண்மை, சோதனை மற்றும் மதிப்பீடு, சிஸ்டம்ஸ் இன்ஜினியரிங் ஆகியவற்றில் நுட்பவியலர் பட்டம் பெற்றவர். முன்னாள் அதிபர் ஒபாமாவின் அமைச்சரவையில், ஆசியா, அமெரிக்கா, பசிபிக் தீவுகளுக்கான அதிபரின் ஆலோசனைக் குழு உறுப்பினராக ரவி சவுத்ரி அங்கம் வகித்தார்.
இதையும் படிங்க:Aadhaar: இலவசமாக ஆதார் எண் அப்டேட் செய்ய ஏற்பாடு.. உடனே இதை செய்யுங்க!
அமெரிக்க போக்குவரத்துத் துறையின் நிர்வாக இயக்குனராக பதவி வகித்த அவர், 1993 முதல் 2015ஆம் ஆண்டு வரை அமெரிக்க விமானப் படையில் செயல்பாடு, பொறியியல், மூத்த அதிகாரிகள் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்து உள்ளார். மேலும் அமெரிக்காவின் சி-17 போர் விமானத்தை கையாளும் திறமை கொண்ட ரவி சவுத்ரி, ஆப்கானிஸ்தான், ஈராக் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போர் பணியில் ஈடுபட்டு உள்ளார்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற ரவி சவுத்ரி தொடர்ந்து பெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் பிராந்தியங்கள் மற்றும் மைய செயல்பாடுகள் மற்றும் வணிக விண்வெளி அலுவலகத்தின் மூத்த அதிகாரியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். மேலும் ஏவியஷன் மற்றும் விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிப் பணிகளில் ரவி சவுத்ரி ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனில் மிக முக்கிய மற்றும் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றான விமானப் படையின் துணை அமைச்சர் பதவிக்கு ரவி சவுத்ரி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். மேலும் ரவி சவுத்ரிக்கு எரிசக்தி, நிறுவல்கள், சுற்றுச் சூழல், விமானப் படையின் நிலைத்தன்மை மற்றும் செயல்பாட்டு தயார் நிலை, ராணுவ வீட்டு வசதி துறை உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை?