டெல்லி: யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்காக தேர்வுகளை நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதில், காலியாக உள்ள 1,105 சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, சிவில் சர்வீசஸ் முதல் நிலைத் தேர்வு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 73 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
இந்த நிலையில், யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வு முடிவுகள் இன்று(ஜூன் 12) வெளியாகியுள்ளன. யுபிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, முதல் நிலைத் தேர்வில் 14,624 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வர்கள் www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும், மேலும் சந்தேகங்கள் இருப்பின் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் காலை 5 மணி வரை, 011-23385271, 011-23098543 அல்லது 011-23381125 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.