பரேலி:உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், பதவூனைச் சேர்ந்த ஒரு பெண்ணும் பரேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்து உள்ளனர். அப்போது, இருவரும் நட்பாக பழகி வந்து உள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து உள்ளது.
இதனால், இனி இருவரும் இணைந்து திருமண வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுத்து உள்ளனர். ஆனால், இந்த முடிவிற்கு இரு வீட்டார் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
அது மட்டுமல்லாமல், இருவரும் முறையாக திருமணம் செய்து கொண்டு கணவன் - மனைவியாக வாழத் தொடங்கி உள்ளனர். அதிலும், தம்பதியரில் ஒரு பெண் தனது பாலினத்தை மருத்துவமனையில் முறையாக சிகிச்சை எடுத்து மாற்றிக் கொண்டு உள்ளார். இந்த நிலையில், இருவரும் தங்களது திருமணத்தை முறைப்படி பதிவு செய்யக் கோரி சதார் சப் டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் முன்பு விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இந்த திருமணப் பதிவு குறித்த விண்ணப்பத்தைப் பெற்ற சதார் சப் டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் பிரத்யூஷ் பாண்டே, இந்த விவகாரம் தொடர்பாக அரசு வழக்கறிஞர்களின் சட்ட ரீதியிலான கருத்துகளைக் கேட்க பரிந்துரை செய்து உள்ளது. மேலும், இது தொடர்பாக சப் டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் பிரத்யூஷ் பாண்டே கூறுகையில், “சிறப்பு திருமண விதிகளின் கீழ் இந்த விண்ணப்பம் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் யாரேனும் தங்களுடைய திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினால், சப் டிவிஷ்னல் மாஜிஸ்திரேட்டிடம் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
தனது பாலினத்தை மாற்றிய பிறகு, விண்ணப்பதாரரால் இந்த விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, நாங்கள் அதனை சட்ட ரீதியிலான கருத்துகளைக் கேட்க உள்ளோம். இது போன்ற வழக்கு இங்கு வருவது இதுவே முதல் முறை. விண்ணப்பதாரர் தனது பாலினத்தை மாற்றி உள்ளதால், இந்த விவகாரத்தில் சட்ட ரீதியிலான அனுகுமுறையை தெரிந்த கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இறுதி முடிவு எதுவாக அமைந்தாலும், அது சட்ட விதியின் கீழாகவே அமையும்” என தெரிவித்தார்.
முன்னதாக, உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து வந்து உள்ளனர். இதற்காக ஒரு பெண் தனது பாலினத்தை அறுவை சிகிச்சை மூலம் மாற்றம் செய்து உள்ளார். ஆனால், தான் காதலித்து வந்த பெண் வேறு ஒரு நபரைக் காதலித்து வந்து உள்ளார். இதனால் இருவரும் திருமணம் செய்வதற்கு தடை ஏற்பட்டு உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட பாலினம் மாற்றம் செய்த பெண் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Seema Haider: 2008 மும்பை தாக்குதல் ஞாபகமில்லையா...? மும்பை போலீசாருக்கு மர்ம நபர் மிரட்டல்!