உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் புதாரா கிராமத்தில் நேற்று (டிச.2) 4 வயது சிறுவன் தனது சகோதரியுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது 30 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்தார். இது தொடர்பாக சிறுவனின் தந்தை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் தெரிவிக்கப்பட்டதும் குல்பஹத் காவல் நிலைய பொறுப்பாளர் அனுப் துபே சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கைகளை எடுத்தார். சிறுவனை உயிருடன் மீட்பதற்காக சம்பவ இடத்தில் தீயணைப்புத் துறையினர், உள்ளூர் காவல் துறையினர், மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மீட்பு மேலாண்மை குழு இணைந்து செயலாற்றினர்.
கிட்டத்தட்ட 20 மணி நேரம் கடுமையாக போராடி பேரிடர் மீட்பு குழுவினர் அச்சிறுவனை மீட்டனர். ஆனால் சம்பவ இடத்தில் இருந்த மருத்துவக் குழுவினர் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
60 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில், சிறுவன் 30 அடி ஆழத்தில் இருந்ததாக தெரிவித்த மீட்பு படையினர், சிறுவன் மூச்சுவிட ஏதுவாக ஆக்சிஜன் வசதி, பிஸ்கட், பால் போன்ற உணவு பொருட்களை ஏற்படுத்திக் கொடுத்தாகவும் கூறினர்.
சிறுவனின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சம்பவ இடத்தில் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும்கூட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.