Nirmala Sitharaman on no confidence motion டெல்லி : இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்து உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான 3வது நாள் விவாதம் நடைபெற்றது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதீத பணவீக்கம், மெதுவான வளர்ச்சி என இரண்டு சவால்களால் உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து உள்ளதாகவும், கடந்த 2022ஆம் ஆண்டு உலக பொருளாதாரம் வெறும் 3 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளர்ச்சி அடைந்ததாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வரலாறு காணாத அளவில் பொருளாதார நெருக்கடியை பிரிட்டன் சந்தித்து உள்ளதாகவும், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளதாகவும் நிர்மலா கூறினார். ஐரோப்பிய மத்திய வங்கி கூட முன்னேப்போதும் இல்லாத அளவில் உயர் பணவீக்கத்தால் நலிவடைந்து உள்ளதாக கூறினார்.
உலக நாடுகளின் நிதி நிலை குறித்து மதிப்பீடு வழங்கும் மோர்கன் ஸ்டான்லி கடந்த 2013ஆம ஆண்டு, வலுவற்ற பொருளாதாரத்தை கொண்ட ஐந்து நாடுகளின் பட்டியலில் இந்தியாவை இணைத்து இருந்ததாகவும், வலுவிழந்த பொருளாதரம் கொண்ட நாடு என இந்தியா அந்த அமைப்பு அறிவித்ததாக கூறினார்.
தற்போது அதேநிறுவனம் இந்தியாவுக்கு அதிக மதிப்பீடுகள் வழங்கி உள்ளதாகவும் வெறும் 9 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து உள்ளதாகவும், அரசின் கொள்கைகள் மூலம் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து இருப்பதை காண முடிகிறதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் நாட்டு மக்களின் கனவுகளை காட்டும் அதேநேரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களின் கனவை நனவாக்கி வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த 9 ஆண்டுகளில் விவசாய பட்ஜெட் 5 மடங்கு உயர்ந்து உள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டை பற்றி நிறைய பேச வேண்டி இருப்பதாக கூறிய நிர்மலா சீதாராமன் மதுரை எய்ம்ஸ் விவகாரத்தில், நிலம் கையகப்படுத்தியதில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்ததாக தெரிவித்தார். மேலும், எய்ம்ஸ் கட்டுமானத்திற்காக ஆயிரத்து 200 கோடி ரூபாயில் இருந்து ஆயிரத்து 900 கோடி ரூபாய் வரை பட்ஜெட் சென்ற போதும், பணிகள் இன்னும் நடைபெறாமல் இருப்பதற்கான பழியை மாநில அரசுதான் ஏற்றுக் கொள்ள வேண்டுமே தவிர மத்திய அரசு அதற்கு பொறுப்பேற்காது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன், அவையில் மகாபாரதத்தில் இருந்து திரௌபதியைப் பற்றி கனிமொழி பேசியதாகவும், மகாபாரதத்தில் திரௌபதி அவமானப்படுத்தப்பட்டதை மறுக்கவில்லை என்றும் பெண்களை பொறுத்தவரையில், மோசமாக அவர்கள் நடத்தப்படுவதும் தவறாக விமர்சிக்கப்படுவதும் ஒவ்வொருவருக்கும் வலியையே தருகிறது என்று கூறினார்.
மேலும், மக்களவைக்கும், கனிமொழிக்கும் தான் ஒரு நிகழ்வை நினைவுகூற விரும்புவதாகவும், புனிதமான தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 1989ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்ட போது அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள், அவரைப் பார்த்து சிரித்து கொண்டு இருந்ததாகவும், நீங்கள் திரௌபதி குறித்து பேசுகிறீர்களா என்றார்.
மேலும் திமுக, ஜெயலலிதாவை மறந்துவிட்டதா என்றும் நீங்கள் தானே ஜெயலலிதாவை அவமதித்தீர்கள் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதம் கற்கக் கூடாது என்ற திணிப்பு இருப்பதாகவும் புறநானூறு, திருக்குறள் உள்ளிட்டவை குறித்து உலக அரங்கில் பேசி பிரதமர் மோடி தமிழை பெருமைப்படுத்தி உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சிலப்பதிகாரம் நம் அனைவரையும் தமிழர்கள் என்றே சொல்வதாவும் திராவிடர்கள் என்று கூறவில்லை என்றும் அப்படிப்பட்ட ஆட்சியைத் தான் பிரதமர் மோடி கொடுத்து வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். முன்னதாக நிர்மலா சீதாராமனின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து திமுக, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அவை வெளிநடப்பு செய்தனர்.
இதையும் படிங்க :மார்கதர்சி சிட்பண்ட் வழக்கில் வாதம் நிறைவு.. இடைக்கால தடை மீதான முடிவு நிறுத்தம்!