புனே:மகாராஷ்டிராவின் புனே நகரில் கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டடம் நேற்றிரவு (பிப்ரவரி 3) இடிந்து விழுந்தது. அந்தக் கட்டடத்தில் பணியாற்றிய ஐந்து பணியாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் சில பணியாளர்கள் இடிபாடுகளில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
இது குறித்து, மீட்புப்பணியில் ஈடுபட்டுவரும் தலைமை தீயணைப்பு அலுவலர் சுனில் கில்பிளே கூறுகையில், "இரும்புக் கம்பிகளால் கட்டடப்பட்டிருந்த பகுதியில் 10 பணியாளர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கையில், கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிவிட்டனர்" என்றார்.
போதிய முன்னெச்சரிக்கை இல்லை
இந்நிலையில், இச்சம்பவத்திற்கு நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "புனேவில் கட்டப்பட்டுவந்த கட்டடம் இடிந்த விழுந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைவார்கள் என நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
விபத்துக்கு காரணம் குறித்து புனே காவல் துணைஆணையர் ரோஹிதாஸ் பாவர் கூறுகையில், "முதல்கட்ட தகவலில், கட்டடப்பட்ட வரும் கட்டடத்தில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் செய்யப்படவில்லை. மேலும் இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர், இரண்டு பேருக்கு படுகாயமும், மூன்று பேருக்கு சிறு காயங்களும் ஏற்பட்டுள்ளன" என்றார்.
24 மணிநேர பணியால் விபத்தா?
சம்பவ இடத்தை ஆய்வுசெய்த உள்ளூர் எம்எல்ஏ சுனில் விஜய் திங்ரே, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டார். அதன்பின்னர், அவர் செய்தியாளரிடம் கூறுகையில், "விபத்துக்குள்ளான இந்தக் கட்டடத்தில் 24 மணிநேரமும் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதாக எனக்குத் தகவல் கூறப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பணியாளர்கள் எவ்வளவு நேரம் இங்குப் பணியாற்றிவருகின்றனர் என்பது குறித்து சரியாகச் தெரியவில்லை.
அவர்கள் சோர்வாக இருந்திருக்கும் நிலையில், இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. விபத்தில் சிக்கிய பணியாளர்கள் அனைவரும் பிகாரைச் சேர்ந்தவர்கள் எனப் பிற பணியாளர்கள் கூறினர். இது குறித்து, அலுவலர்கள் தங்களின் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்" என்றார்.
முன்னதாக, 2016ஆம் ஆண்டில் புனேவின் பலேவாடி பகுதியில் இதேபோன்று கட்டட விபத்து ஒன்று நடந்தது. 14 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டுமான பணியின்போது சரிந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடகாவில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை