ஜபல்பூர்:மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரை அடுத்த திண்டோரி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, உடல் நலக்குறைவு ஏற்படவே, ஜபல்பூர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்து உள்ளது. குழந்தையை வீட்டிற்கு ஆம்புலன்சில் எடுத்து செல்ல, மருத்துவமனை நிர்வாகத்தை நாடியபோது, அவர்கள் கேட்ட பணத்தை, இவர்களால் கொடுக்க முடியாததால், குழந்தையின் சடலத்தை, ஒரு பையில் வைத்துக்கொண்டு சென்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டோரி கிராமத்தைச் சேர்ந்த ஜம்னா பாய்க்கு, பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவர், திண்டோரி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் குழந்தையைப் பிரசவித்தார். குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு, சிகிச்சைப் பலனின்றி குழந்தை இறந்தது.
தந்தை வேண்டுகோள் :இறந்த குழந்தையின் சடலத்தை, திண்டோரி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்குக் கொண்டு செல்ல, வாகன வசதி செய்து தருமாறு, மருத்துவமனை நிர்வாகத்திடம், குழந்தையின் தந்தை, கோரிக்கை விடுத்தார். மருத்துவமனை நிர்வாகம், அவருக்கு உதவி செய்ய மறுத்து விட்டது. தனியார் ஆம்புலன்ஸ் சேவையை அணுகப் போதிய வசதி இல்லாததால், குழந்தையை, தாங்களே கொண்டு செல்ல முடிவு எடுத்தனர்.