டெல்லி:அண்மையில் டெல்லியில் சிறுமி பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதுதொடர்பான வீடியோ அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது.
இந்தப்பதிவிற்காக ராகுல்காந்தியின் கணக்கு முடக்கப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள், தொண்டர்களின் கணக்குகளும் முடக்கப்பட்டன.
கணக்குகள் முடக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த ராகுல்காந்தி, இது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் எனவும், தன் கணக்கை முடக்கியதன் மூலம் தன் கணக்கில் கருத்துகளைத் தெரிவிக்கும் மக்களின் கருத்துரிமையை ட்விட்டர் மறுத்துள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், "நாடாளுமன்றத்தில் பாஜக எங்களைப் பேச அனுமதிப்பதில்லை. ஊடகங்களையும் அவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள். இந்தச் சூழ்நிலையில், என்னுடைய கருத்தை தெரிவிப்பதற்கான தளமாக ட்விட்டர் இருப்பதாக எண்ணினேன். ஆனால், ட்விட்டர் நிறுவனம் ஒரு சார்பாக செயல்படுவது வெளிப்படையாகத் தெரிகிறது. அரசாங்கம் கூறுவதை அது கேட்கிறது" எனவும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ட்விட்டர் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரி அமெரிக்காவுக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அறிவிப்பையும் ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க:பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் ட்விட்டர்- ராகுல் குற்றச்சாட்டு