நாராயண்பூர்(சத்தீஸ்கர்): சத்தீஸ்கர் மாநிலம், கான்கேர் மாவட்டத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பயன்பாட்டுக்காக சாலைகள், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றை அம்மாநில அரசு கட்டுவதாக தெரிகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஓராண்டுக்கும் மேலாக பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு போராடும் மக்களை, நக்சல்கள் என்று கூறி போலீசார் கைது செய்தனர். அப்பகுதிகளில் முகாமிட்ட போலீசார், பொய் வழக்குகளில் ஏராளமான பழங்குடியின மக்களை கைது செய்தனர். இதனால் காவல்துறை முகாம்களை அகற்றக்கோரியும் அம்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் ப்ரெஹ்பேடா என்ற பகுதியில் போலீசார் புதிய முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கான பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது.