புதுச்சேரி:இந்த நிகழ்வில் பேசிய புதுச்சேரி பல்கலைக்கழக மானுடவியல் துறைப் பேராசிரியர் ஆ. செல்லபெருமாள், ”பழங்குடியினப் போராட்ட நாயகர்களுக்கு பிர்சா முண்டா முன்னுதாரணமாகத் திகழ்கின்றார். அவரைப் போலவே பல நாயகர்கள் தங்களது பழங்குடியின மக்களைப் பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுவித்து உரிமைகளை மீட்டெடுக்கப் போராடி உள்ளனர்.
ஷாகித் வீர் நாராயண் சிங், அல்லூரி சீத்தா ராமராஜு, ராணி கைடினிலு, பீமா நாயக், தலுக்கல் சந்து, ராம்ஜி கோண்ட், புது பகட் போன்றோரின் தியாகங்கள் போற்றப்பட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னணி நாயகன் பிர்சா முண்டா
இக்கருத்தரங்கில் திருவாரூர் மாவட்டம் குடவாசல் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ஏ. மாரிமுத்து கருத்துரை ஆற்றினார். அவர் பேசுகையில், "காந்தியின் வருகையால் இந்திய விடுதலைப் போராட்டத்திற்குப் புதிய உத்வேகம் கிடைத்தது. ஆனால், 1850இல் இருந்து காந்தி வருகைக்கு முன்பு வரை இந்திய விடுதலைப் போராட்டம் பழங்குடியினர் கைகளில்தான் இருந்தது. இதில் முன்னணி நாயகனாக விளங்கியவர் பிர்சா முண்டா" என்றார்.
மேலும், அரசியல் மாற்றம் பலனளிக்க வேண்டுமானால் கூடவே கலாச்சார மாற்றமும் ஏற்பட வேண்டும் என்ற கருத்துடையவராக பிர்சா முண்டா இருந்ததாகவும், 25 வயதிலேயே மறைந்துவிட்ட பிர்சா முண்டா இளைஞர்களின் ஆதர்ச மாதிரியாக விளங்கக் கூடியவர் என்றும் புகழாரம் சூட்டினார்.