தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள கல்லறைகளை இடமாற்றம் செய்யும் விவகாரம் - தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுவது என்ன? - கண்டனம்

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை இடமாற்றம் செய்யும் உத்தரவிற்கு தொல்லியல் ஆய்வாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கல்லறைகளை இடமாற்றம் செய்யும் விவகாரம்- தொல்பொருள் அறிஞர்கள் சொல்வது என்ன?
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள கல்லறைகளை இடமாற்றம் செய்யும் விவகாரம்- தொல்பொருள் அறிஞர்கள் சொல்வது என்ன?

By

Published : Jul 27, 2023, 1:05 PM IST

டெல்லி : சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான கல்லறைகளை அகற்ற மத்திய கலாச்சார மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவு, நாட்டின் முன்னணி தொல்லியல் ஆய்வாளர்கள் இடையே பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.

1687ஆம் ஆண்டு முதல் 1692ஆம் ஆண்டு வரை அப்போதைய மெட்ராஸ் ஆளுநராக இருந்த எலிஹு யேல், அவரது மகன் டேவிட் யேல் மற்றும் அவரது நண்பர் ஜோசப் ஹைன்மர் ஆகியோரின் நினைவாக கட்டப்பட்ட கல்லறைகள், தற்போது சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்து உள்ளன. இந்த கல்லறைகளை அகற்றுவது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்ய இந்திய தொல்லியல் துறை (ASI) இப்போது தயாராகி வருகிறது.

எலிஹு யேல் பிரிட்டனுக்குத் திரும்பிய நிலையில் தனது செல்வத்தில் கணிசமான தொகையை இந்தியாவின் ஒரு "கல்லூரிப் பள்ளிக்கு" பங்களித்தார். இது பின்னர் யேல் கல்லூரி என்றும், பின்னர் யேல் பல்கலைக்கழகம் என்றும் பெயர் மாற்றப்பட்டது. இவரது பங்களிப்பில் உருவான யேல் பல்கலைக்கழகம், தற்போது உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய தொல்லியல் துறை (ASI) 1921ஆம் ஆண்டு அப்போதைய புராதன நினைவுச் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் 1904இன் படி, முதல் முறையாக கல்லறையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்து இருந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இது பண்டைய மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் (தேசிய முக்கியத்துவப் பிரகடனம்) சட்டம், 1951இன் கீழ் ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக மாற்றி அமைக்கப்பட்டது.

உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தரும் வழக்கறிஞர்கள், ஊழியர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்படும் வாகனங்களின் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்யும் வகையில் மல்டி லெவல் பார்க்கிங்கிற்கு வழி வகுக்கும் வகையில் இந்த கல்லறைகளை இடம் மாற்றம் செய்யும் வரைவு முன்மொழியப்பட்டு உள்ளது.

பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னத்தில் இருந்து 100 மீட்டருக்குள் சட்டத்தின்படி எந்தக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது என்று சட்ட விதிகள் உள்ளது. இதன் காரணமாக, அங்கு வளர்ச்சிப் பணிகளுக்கு இந்த கல்லறை தடையாக உள்ளது. பி மனோகரன் என்ற நபர் தாக்கல் செய்த மனுவின் பேரில் இடமாற்ற உத்தரவை பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த கல்லறைக்கு தொல்லியல் மதிப்போ அல்லது வரலாற்று முக்கியத்துவமோ இல்லை. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக பராமரிக்கும் ஒரு கலைநயமிக்க தலைசிறந்த படைப்பாகவும், இது இல்லை என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநரின் மகனின் இளைப்பாறும் இடமாக இருக்க வேண்டுமே தவிர, வரலாற்று முக்கியத்துவம் இல்லாத தனிநபர்களின் மயானத்தை தற்போதைய சூழ்நிலையில் அவசியமான வளர்ச்சிப் பணிகளுக்காக புறந்தள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஒவ்வொரு நினைவுச் சின்னம் அல்லது வரலாற்று தொடர்புடைய தொல்லியல் பொருளைப் பாதுகாக்கும் பொறுப்பை மாநிலங்களுக்கு வழங்கும் அரசியலமைப்பின் 49வது பிரிவுக்கு எதிரானது என்று கூறி, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை இந்த இடமாற்றத்தை எதிர்த்தது.

ஒரு நினைவுச் சின்னத்தின் கலை அல்லது தொல்பொருள் முக்கியத்துவத்தை தீர்மானிக்க நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் இல்லை என்று சில புகழ் பெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். உலகப் புகழ்பெற்ற யேல் பல்கலைக்கழகத்தை நிறுவிய எலிஹு யேல் என்பவரால் கட்டப்பட்ட கல்லறை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் சகாப்தத்தின் புதைக்கப்பட்ட கட்டடக் கலையின் நினைவுகளை அதில் உள்ளடங்கி உள்ளதாக இந்திய தொல்லியல் துறையின் ஓய்வு பெற்ற இணை இயக்குநர் ஜெனரல் டாக்டர் எம் நம்பிராஜன் கூறி உள்ளார்.

இந்த கல்லறைகள் அதன் வரலாற்று, கட்டடக்கலை அல்லது அழகியல் முக்கியத்துவத்தை தீர்மானிப்பதில் வழிபாட்டுத் தலங்கள், கோட்டைகள், முகலாய கல்லறைகள் போன்றவற்றின் விரிவான கட்டடக் கலையுடன் ஒப்பிட முடியாது. இந்த விஷயங்களில் நிபுணர்களான தொல்லியல் துறை அதிகாரிகளிடம் இந்த விஷயத்தை விடுவது நல்லது என நம்பிராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

மற்றொரு பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஜி.எஸ்.குவாஜா கூறுகையில், "இது மிகவும் துரதிர்ஷ்டவசமான உத்தரவு. நினைவுச்சின்னம் நாடாளுமன்ற சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. உயர் நீதிமன்றம் சட்டத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. கொடுக்கப்பட்ட பாதுகாப்பை அகற்ற சட்டத்தின் கீழ் ஒரு வகுக்கப்பட்ட நடைமுறை உள்ளது. ஒரு நினைவுச்சின்னம் மற்றும் தொல்லியல் பற்றிய ஆழமான புரிதல் கொண்ட நிபுணர்கள் குழு மட்டுமே அதை அமைக்க முடியும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட, ஒரு நினைவுச்சின்னத்தை அதன் சொந்த தேவை மற்றும் வசதிக்கேற்ப இடமாற்றம் செய்ய முடியாது. மாறாக, நிபுணர்களின் ஆலோசனையுடன் விரிவான முறையில் செய்யப்பட வேண்டும்” என தெரிவித்து உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம், தனக்கென ஒரு வாகன நிறுத்துமிடத்தை உருவாக்குவதற்காக, ஒரு வரலாற்று நினைவுச்சின்னத்தை அகற்ற உத்தரவிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த பிரச்னையை பாரம்பரிய நிபுணர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று மற்றொரு பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கூறினார்.

"வருங்கால சந்ததியினருக்கான பாரம்பரியத்தை பாதுகாக்க மற்றும் பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, ராஜீவ் மான்கோடிக்கும், குடியரசுத் தலைவருக்குமான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரிவான தீர்ப்பை வழங்கியது. அதை சென்னை உயர் நீதிமன்றம் முற்றிலும் கவனிக்கவில்லை" என்று அவர் அதனை மேற்கோள் காட்டி உள்ளார்.

இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் நாடு முழுவதும் இதுபோன்ற வழக்குகளில் சிக்கலான சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கும். எனவே, இந்த உத்தரவை உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் முன் மேல்முறையீடு செய்ய அதிகாரிகள் பரிசீலிக்கும் முடிவை எடுப்பார்கள் என்று தான் நம்புவதாக நம்பிராஜன் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கல்லறைகள் - மத்திய அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details