கேரள மாநிலம் கன்னூர் பகுதியைச் சேர்ந்த ஆறு மாத குழந்தை இம்ரான். இக்குழந்தைக்கு முதுகெலும்பு தசைக் குறைபாடு (Spinal Muscular Atrophy) இருந்தது சில நாள்கள் கழித்து தெரியவந்துள்ளது.
இது மிகவும் அரிய வகையிலான, கடுமையான குறைபாடு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இக்குறைபாட்டினால் மத்திய நரம்பு மண்டலம், புற நரம்பு மண்டலம் போன்றவை பாதிக்கப்படும்.
இதனையடுத்து இக்குழந்தைக்கு கோழிக்கோடு இன்ஸ்டிடியூட் ஆஃப் மேடர்னல் அண்ட் சில்ட் ஹெல்த், அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த மூன்று மாதங்களாகச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இதனையடுத்து இம்ரானின் தந்தை ஆரிஃப் கேரள உயர் நீதிமன்றத்தில் குழந்தைக்கு இலவச சிகிச்சை வழங்குமாறு கோரிக்கைவிடுத்திருந்தார். தனது மகனைக் காப்பாற்ற 18 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்தினை வழங்கிட உதவ வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்திருந்தார்.
இம்ரானுக்குத் தேவையான மருந்தை வாங்க முடியுமா என ஆய்வுசெய்ய மருத்துவக் குழுவுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. அத்துடன் அது குறித்த அறிக்கையையும் கோரியது. முக்கியமான மருந்துகளை வாங்குவதற்காக இம்ரானின் பெற்றோர் மேற்கொண்டுவந்த கிரவுட் பண்டிங் முயற்சியைத் தொடரலாம் என்றும் கூறியது.
இருப்பினும் இம்ரான் உயிர் வாழத் தேவையான 'சோல்கென்ஸ்மா' என்னும் மருந்தினை வாங்க 18 கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. இச்சூழலில் இம்ரானுக்கு உதவிசெய்ய பலரும் நிதி அளித்தனர். அதில் 16.5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இம்மருந்தினை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் 1.5 கோடி ரூபாய் தேவைப்பட்டுள்ளது. இதனை இம்ரானின் பெற்றோர் புரட்டும் முன்னர் குழந்தை உயிரிழந்தது. இச்சம்பவம் கேரள மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இறக்கும் தருவாயில் இருக்கும் கணவரின் விந்தணுக்களைக் கேட்ட பெண்